Click Click

Thursday, May 19, 2011





பெறுநர்,

தேவதைகளின் அரசி,
தேவதை குடியிருப்பு,
தேவதைகளின் நகரம்,
தேவதைகளின் நாடு.

என் தேவதையே...,

உனக்கு ஒரு அழகான காதல் கடிதம் எழுதலாம் என்று அமர்ந்த பொழுது உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அழகானது என்றதும் உன் முகத்தைத் தவிர எதுவும் எனக்கு நினைவிற்கு வரவில்லை. இரண்டு உருண்டோடும் இரு கறுப்புப் புள்ளிகளுக்குள்ளே சின்னதாய் வெள்ளையாய் இருப் புள்ளிகளில் ஆரம்பித்து அதைச் சுற்றி முட்டை வடிவில் அங்குமிங்குமாய் கோடுகள் கிளித்து கடவுள் ஆரம்பித்த அந்த கோலம் முடியும் பொழுது முகமாய் மலர்ந்த உன்னை அந்த பிறை நிலாவும் வேடிக்கைப் பார்த்திருக்கும் எனபதில் யாருக்கேனும் சந்தேகம் வந்திருக்குமோ...! இவ்வளவு அழகான உன்னை விடவா பிரம்மனால் இன்னொரு அழகைப் படைக்க முடியும்??! இல்லை... கண்டிப்பாக இல்லை...

பசி போன்றது காதல் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். காதல் வந்தால் பத்தும் என்ன மொத்தமும் பறந்து போகுமாம்...பசிக்கும் என்பார்...உறங்க துடிக்கும் என்பார்...ஆனால் எதுவுமே நடக்காமல் அவள் பின்னாலேயே பொய் நிற்குமாம் இந்த இதயம்...இதெல்லாம் நம்ப முடிகிறதா??? இல்லை என்றாலும் எனக்கு மட்டும் தூக்கம் கூடத் துரோகம் செய்வதைப் பார்... நான் தூங்கும் முன்னரே தினமும் என் கண் முன்னாலேயே வந்து நின்று விடுகிறாய்...தூங்கலாம் என்று முகத்தை மூடுகையில் என் இமைகளை தட்டுகிறாய்...யோசித்துப்பார்! அதன் பிறகு என் கனவைக் கலைத்து எழுந்து விட முடியுமா என்ன...

தினமும் சூரியன் தலைக்கு வரும் வரை தூங்கி விடுகிறேன். பாவம் இந்த மனசு மட்டும் கனவே கலைந்து விடாதே என்று கண்களை திறக்க விட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது...இது ஒரு புறமிருக்க எனக்குள் இருக்கும் உன் பசியை மட்டும் என்னால் தீர்க்க முடியாமல் தினம் தினம் திண்டாடிப் போகிறேன்...அளவிற்கதிகமாக உண்ணும் என்னைப் பார்த்து என் தாய் கேட்கிறாள் " நீ சாப்பிடுவதெல்லாம் எங்கே போகிறது..உன் உடம்பில் எதோ பிரச்சினை இருக்கிறது, மருத்துவரைப் பார்க்க வேண்டும்" என்று. நான் என் பசிக்கு சாப்பிட்டால் என் உடல் தேறும் நான் சாப்பிடுவது உன் பசிக்கு அல்லவா ... இருந்தும் தினம் ஆறு முறை பெரும்பாடு படுகிறேன்...இதில் என் பசிக்கு எப்படி சோறு போடுவது ...இப்படி இருக்க மருத்துவர் மட்டும் என்ன செய்து விட முடியும்...

எல்லாவற்றிற்கும் காரணம் காதல்...

சிலருக்கு இந்த காதல் பாழாய் போனது...ஆனால் எனக்கோ பாழையும் சீராய் போக்கியது இந்த காதல் ...

உனக்கு நினைவிருகிறதா? முதல் முதலாய் நான் உன்னை சந்தித்த அந்த நொடி... வண்ண நிற பலூன்களை பார்த்ததும் "எனக்கு அது வேணும்..வேணும்..." என்று அழுது குதிக்கும் குழந்தை போல என் மனம் அடம்பிடித்து நின்றது. அப்பொழுதுதான் இந்த மானம் கேட்ட என் மனம், உன் அழகிற்கு என்ன தரலாம் என்று கணக்கு போட ஆரம்பித்தது...ஆனால் பாவம் மனது...அதனால் கணக்கிடும் அளவிற்கு அது இல்லை...மில்லியன், பில்லியன் என்று கணக்கு நீண்டு கொண்டே போனது ... உன் அழகை அளவிட எந்த கணிணியும் கண்டுபிடிக்கவில்லை என்று உன்னை பார்த்த உடனேயே கண்டு கொண்டேன்..

பிறகு என் மனம் எனக்கு தட்டிக் கொடுத்தது "நீ புண்ணியம் செய்தவன் டா" என்று. உண்மைதானே எத்தனை பேர் தவம் கிடந்தாலும் கிடைக்காத தரிசனம், எவ்வளவு எளிதாக கிடைத்தது எனக்கு...உண்மையில் நான் புண்ணியம் வாங்கிக் கொண்டவன்தான்!. அதன் பிறகு என் மனம் என்னை புண்ணியவான் என்று அழைக்க ஆரம்பித்தது!!!

முக்தி பெற்ற முனிவன் போல் நான் மாற ஆரம்பித்தேன். தவம்... தவம்... கடும் தவம்... உனக்காக நீ வரும் பாதை எல்லாம் கூடுகள் கட்டி இருக்க ஆரம்பித்தேன். அப்பொழுதெல்லாம் என் மனம் சொல்லும் "போ...போய் உன் காதலைச் சொல்லு..." என்று. நான் கேட்க மாட்டேன்..."சீ..சும்மா இரு ... என் தவம் கலைந்து விடும்..." என்று. என் மனம் எத்தனை முறை சொல்லியும் நான் கேட்கவில்லை. தவத்தினால் என்னை கட்டிப் போட்டேன்.

ஒரு நாள் என்னை நீ குறுக்கிடும் பொழுது தலையை திருப்பிப் பார்த்து சிரித்தாய். அப்பொழுது எப்படி இருந்தது தெரியுமா?! யோசித்தாலே என் மயிர் கால்கள் திளிர்த்து நிற்பதைப் பார்...நீ இதழை விரிக்காமல் முகத்தை விரித்து சிரித்ததைப் பார்த்து என் இதயம் கூட்டை விட்டு வெளியே வந்து குதித்தது, என் கண் முன்னே குதித்து உன் நிழல் பார்த்து துடித்தது...அதன் பிறகு என் இதயம் நான் சொல்வதை கேட்க தயாராக இல்லை...கையில் பேனாவுடன் அமர்ந்துவிட்டது.

எனக்கு கவிதை எழுத தெரியும் என்று புரிந்து கொண்ட நாள் அது. ஒரு வரியிலிருந்து பத்தி பதியாய் எழுதி தள்ளியது என் பேனா...அன்று மட்டும் என் பேனா மையும் வெள்ளைத் தாளும் தீர்ந்து விடவில்லை என்றால் நம் தமிழின் அடுத்த காதல் விகட கவி ஆகியிருப்பேன் என்று எண்ணத் தோன்றியது...ஆனால் பாவம் இந்த பேனா என்னை ஏமாற்றிவிட்டது.

காலையில், எழுதியதை பார்த்து...பார்த்து...படித்து...படித்து...மகிழ்ந்து கொண்டேன்.

இன்று என் காதலைச் சொல்லி அவளை என் கூடாரத்திற்கு அழைத்து வரப் போகிறேன்...

என் காதல் தெய்வங்களே என்னை ஆசிர்வதியுங்கள், இன்று நான் தேர்வு எழுதப் போகிறேன்...என்று விண்ணைப் பார்த்து வேண்டினேன். அதற்கு ஒரு எதிரொலிக் கூட கேட்கவில்லை...அப்பொழுதே புரிந்து கொண்டிருக்க வேண்டும் நான்...ஆனால்....

என் பகல் அன்று உன் பாதையில் விடியற்காலையிலேயே வந்து விடிந்தது. புது உடை,கையில் கடிகாரம், கவிதை தொகுப்பு, ஒரு அழகான ஒரு சிவப்பு ரோஜா என்று என் இரண்டு வருடத் தவம் கலைத்து அந்த சாலையில் வந்து நின்றேன்...

காலை ஆறு மணியிலிருந்து 7.00, 8.00, 9.௦௦... 12.௦௦. என்று நீண்டது நேரம். அவள் வரவில்லை...யாரெல்லாமோ என்னை குறுக்கிட்டுச் சென்றனர்...என் தேவதை மறைந்திருந்தாள்...அப்படி என்றால் மறையும் பொழுது எதற்காக சிரித்தாள்??? என்று கேட்ட பொழுது என் மனம் சொல்லியது,

"ஹ ஹ ஹா ...முட்டாள்...ஒரு பக்தனுக்கு எத்தனை முறை ஒரு சாமி தரிசனம் தரும்...முதல் நாளே சாமியை அழைத்து உன் பூஜை அறையில் அமர வைக்க முடியவில்லை...தூ...நீ எல்லாம் காதலிக்கிறாய்?!!!" என் கன்னத்தில் ஓங்கி அறைந்தது போல இருந்தது.

"அப்படி என்றால் இனி அவள் வர மாட்டாளா...ஐயோ..." என்று தலையில் அடித்து அடித்து அழ வேண்டும் போலிருந்தது எனக்கு. ஆயிரம் கவிதை வைத்திருக்கிறேன், எண்ண முடியாத அளவிற்கு கடிதங்கள் வைத்திருக்கிறேன்...அதில் எப்படி அவள் முகவரியை எழுதுவேன்...தேவதை நகரம்..சொர்க்க பூமி என்றும் தேவதைகளின் அரசி என்றும் எழுதினால் அவளுக்கு சென்று அடையுமா? சொல்லுங்கள் நண்பர்களே...

ஒருவேளை இந்த கடிதம் உங்கள் கைகளை அடைந்தால், அதன் மூலம் என் தேவதையை அடையாளம் கண்டால் உடனே எனக்கு தெரியப் படுத்துங்கள் நண்பர்களே...பாற்பதற்கு தேவதை போல் இருப்பாள்...அவள் கண்களில் ஒரு ஒளி இருக்கும்...சரித்திரக் கதைகளில் வரும் நாயகி போல் இருப்பாள்...ஆயிரம் பெண்கள் என்ன, உலக அழகிகள் ஒன்றாக வந்தாலும் அதில் முதலாவது வருவாள் அவள்...பார்த்தால் எந்த மனிதனும் மயக்கம் கொள்வான்...தயவு செய்து அவளிடம் மயங்காமல் எனக்கு தெரிவியுங்கள்...இன்னும் என் இதயம் அவள் போன சாலையிலேயே கிடக்கிறது அழுது கொண்டு....

No comments:

Earn Money